×

பிரசாரம் முடிய இன்னும் 2 நாளே உள்ள நிலையில் வீடுவீடாக சென்று ஓட்டு வேட்டை தீவிரம்: தொகுதிகளில் வேட்பாளர்கள் முற்றுகை

* சென்னையில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, நெல்லையில் மோடி இன்று பிரசாரம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மறுநாள் மாலையுடன் ஓய்கிறது. இதனால், கட்சியினர், வேட்பாளர்கள் வீடு,வீடாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். வேட்பாளர்கள் தொகுதிகளை முற்றுகையிட்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் இன்று பிரதமர் மோடி, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் பிரசாரத்திற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அதாவது 17ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாநில அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சென்றும் மரியாதை செலுத்தினார். அவரது தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜ வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜான் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இன்று மாலை நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அங்கு அவர் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். தொடர்ந்து அவர் எழுச்சியுரையாற்றுகிறார். தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் க.செல்வம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். 17ம் தேதி (புதன்கிழமை)- தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதேபோல அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் மத்திய சென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, தென்சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

ஒரே நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபடுவதால் சென்னையில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. மேலும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, கூட்டணி கட்சியை சார்ந்த செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜ, நாம் தமிழர் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவர்கள் பிரசாரம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், வேட்பாளர்களும் தொகுதி வாரியாக காலை, மாலை என்று பாராமல் இடைவெளியின்றி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மறுபுறம் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலையில் தொடங்கும் பிரசாரத்தை, இரவு வரை இடைவிடாமல் செய்து வருகின்றனர். அப்போது துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்களியுங்கள் என்று கூறி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தெருக்களிலும் தெருமுனை கூட்டம் பிரசாரம், திண்ணை பிரசாரம், ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி கட்டிக்கொண்டு சென்று பிரசாரம், மாலை நேரம் பொதுக்கூட்டம் என்று தட,புடலாக பிரசாரம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு கட்சிகளின் பேச்சாளர்ள், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் என அனைவரும் அனல் பறக்கும் பேச்சு மூலம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு முறை அல்ல, பலமுறை சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தெருக்கள் தோறும், சந்து, பொந்து என்று அனைத்து இடங்களிலும் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலை முதல் இடைவிடாமல் பிரசாரம் மாநிலம் முழுவதும் களைக்கட்டியது. தெருக்களில் திரும்பிய பக்கம் எல்லாம் கட்சிகளின் கொடிகளாக காட்சி அளித்தது. இன்னும் எஞ்சியுள்ள 2 நாட்களிலும் பிரசாரம் மேலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. 17ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

* கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநில, தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

* தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

The post பிரசாரம் முடிய இன்னும் 2 நாளே உள்ள நிலையில் வீடுவீடாக சென்று ஓட்டு வேட்டை தீவிரம்: தொகுதிகளில் வேட்பாளர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : M. ,Chennai ,K. Stalin ,Edappadi ,Nellai Modi ,Tamil Nadu ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...